×

அமைச்சர்கள், அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை, முப்படைகள் ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளக மீட்பு பணிகள் தீவிரம்: இதுவரை 43 பேர் பலி; 4500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 43 பேர் பலியாகி உள்ளனர். 4500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் 18ம் தேதி வரையில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மாவட்டத்தின் தென்பகுதியை தாமிரபரணி ஆறும், வடபகுதியில் காட்டாற்று வெள்ளமும் 75க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்தது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கும், முகாம்களுக்கும் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளன. ஆங்காங்கே இறந்த ஆடு, மாடு, கோழிகள் தண்ணீரில் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் உடல்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில் 19 உடல்கள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற உடல்கள் தொடர்ந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 4500க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகள், ஏரல், காயல்பட்டினம், திருச்செந்தூர், பெருங்குளம் மற்றும் மாவட்டத்தில் பல ஊர்கள் மழை வெள்ளத்தால் நேற்று 5வது நாளாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஏரல் அருகே உமரிக்காடு, சிறுத்தொண்டநல்லூர், சூளைவாய்க்கால், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் பல பகுதிகளில் தீவு போல் மாறியுள்ளன.

ஏரல், ஆத்தூர், சிவகளை, முக்காணி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான செல்போன் டவர்கள் வெள்ளத்தில் சேதமடைந்தன. இதனால் அங்குள்ள மக்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏரல் பஜாரில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனி, கவர்னகிரி, தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 28 ஆயிரம் கோழிகள் இறந்தன. இவை அந்தந்த பகுதிகளில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் மெயின் ரோடுகளில் தண்ணீர் வடியத்தொடங்கினாலும், பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீரை அகற்றுவதற்காகவும், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத டீசல் இன்ஜின் மோட்டார்களை கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தளவு வெள்ளம் பாதித்தப்பகுதிகளில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

ஆனால், அதிகம் பாதிப்புக்குள்ளான 3வது மைல் திருவிகநகர், இந்திராநகர், ஆசிரியர்காலனி, கந்தன்காலனி, அசோக்நகர், ராஜீவ்நகர், அன்னை தெரசாநகர், நிகிலேசன்நகர், கதிர்வேல்நகர், பால்பாண்டிநகர், அண்ணாநகர், முத்தம்மாள்காலனி, ரகுமத்நகர், குறிஞ்சிநகர், ஸ்டேட்பாங்க் காலணி, அம்பேத்கார்நகர், திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, சிவராஜ்புரம், அலங்காரத்தட்டு, ஊரணி ஒத்தவீடு, காதர்மீரான்நகர், முட்டுக்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மழைநீர் வேகமாக வடியத்தொடங்கி இருக்கிறது.

கடந்த 5 நாட்களுக்குப்பிறகு பல்வேறு இடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனைத்தாண்டி சிரமத்துடன் வெளியே வருகின்றனர். பல இடங்களில் இன்னும் முழுமையாக மின்சாரம் மற்றும் இணையசேவை கிடைக்கவில்லை. அதனை வழங்குவதற்கு மின்வாரிய சேர்மன் ராஜேஸ் லக்கானி தூத்துக்குடியில் முகாமிட்டு 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னமும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் டிராக்டர் மற்றும் படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கலெக்டர் லட்சுமிபதி, ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், முப்படைகள் என ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் இன்னும் சில தினங்களில் 75 சதவீத இடங்களில் மீட்பு பணிகள் நிறைவு பெறும் எனவும் அதிகம் பாதித்துள்ள முத்தம்மாள்காலனி, ஆதிபராசக்தி நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர் போன்ற இடங்களில் இயல்பு நிலை திரும்ப கூடுதல் நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

* சென்னை – தூத்துக்குடி ரயில் சேவை துவங்கியது
தூத்துக்குடி மீளவிட்டான் அருகே ரயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் வெளியேறியதால் அந்த பகுதியில் ரயில்பாதை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்துக்கு தகுதியாக இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ேநற்று காலை தூத்துக்குடி வந்தது. மாலையில் வழக்கம் போல் தூத்துக்குடியிலிருந்து முத்துநகர் எஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இதேபோல், தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

* நடமாடும் எரியூட்டும் வாகனத்தில் உடல்கள் தகனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுடுகாடுகளில் 5 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் மின்தகன மேடை பயன்படுத்தி உடல்களை எரியூட்ட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் உடல்நிலை குறைவால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யாமல் உள்ளது.இதனால், கோவை மாநகராட்சியில் இருந்து நடமாடும் எரியூட்டு வாகனம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மணி நேரத்தில் ஒரு உடல் எரியூட்டப்படுகிறது.

The post அமைச்சர்கள், அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை, முப்படைகள் ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளக மீட்பு பணிகள் தீவிரம்: இதுவரை 43 பேர் பலி; 4500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin district ,Nellai ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...